கணவன் வீட்டுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 22 வயது இளம்பெண்!

958

தமிழகத்தில் கணவனால் இளம்பெண் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குழந்தை அனாதையாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணக்குமார் (24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

மாமியார் வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த தம்பதிக்கு கயல் என்ற 8 மாத பெண்குழந்தை உள்ள நிலையில், ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சரவணக்குமார் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.


வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தனது மனைவியை தொழிற்சாலைக்கு வேலைக்கு போக வேண்டாம் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சமாதானம் பேசுவது போல மாமியார் வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்த சரவணக்குமார் உடனே அவர் மீது ஆத்திரப்பட்டு அவரின் கழுத்து அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் ஜெயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு ஜெயலட்சுமியின் தாய் கதறினார்.

இதற்கிடையே செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கி இருந்த கொலைகாரக் கணவன் சரவணக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெற்ற தாய் கொலை செய்யப்பட்டுவிட தந்தையும் ஜெயிலுக்கு சென்றுவிட, நடந்தது என்ன என்பதை அறியும் பருவமில்லா அவர்களின் 8 மாத பெண் குழந்தை கயல் வெள்ளந்தியாக விழித்துக் கொண்டிருந்தது.

வேதனையில் அழுது துடித்த ஜெயலட்சுமியின் தாயாரோ, தனது மகளே போய்விட்டாள் , இனி அவனுக்கு பிறந்த குழந்தையை தெருவில் வீசிவிடுங்கள் என்று அந்த குழந்தையை ஒதுக்க தொடங்கியது தான் வேதனையின் உச்சமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் பசியால் தவித்த அந்த குழந்தை ஊராரின் கைகளில் இருந்து மாறி தனது தாயின் சகோதரியிடம் வந்து சேர, அவர் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து கதறியது அந்த பிஞ்சு.

இந்த நிலையிலும் ஆத்திரம் தாளாமல் அழுது கொண்டிருந்த ஜெயலட்சுமியின் தாய், குழந்தையை வாங்க மறுத்ததால், சரவணகுமாரின் குடும்பத்தினரிடம் குழந்தையை கொடுத்துவிடலாம் என ஊரார் முடிவு செய்துள்ளனர்.