காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

246

கன்னியாகுமரி……

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த காதலுக்கு இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், விடாமல் வீட்டினரைச் சமாதானம் செய்த அபிஷா கடந்த 2021ம் ஆண்டு பெர்லினை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது 50 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிஷாவின் தந்தை தனது மகளுக்குச் சீதனமாகக் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓவியரான பெர்லினுக்கு முழு நேர வேலை என்ற ஒன்று இல்லாமல் இருந்துள்ளது. அதோடு, நண்பர்களுடன் ஊர் சுற்றி பொழுதைக் கழித்து வந்துள்ளார்.


மேலும், அவர் அபிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை பொறுக்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. அதேபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், உதவிப் பேராசிரியையாக பணிக்குச் சேர்ந்து சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாலை பணி முடிந்து அபிஷா வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்துத் தாக்கினார்.

மேலும், மனைவியை தரதரவென காரில் இருந்தபடியே இழுத்துச் சென்றார். இதில் அபிஷா அலறி கூச்சல் போட்டார். இதைப் பார்த்த அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்திச் சென்றனர்.

உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாகத் தப்பிச் சென்றார். கீழே விழுந்த அபிஷாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிஷாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.