இத்தாலியில் தமது இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சொந்த பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சில மணி நேரம் முன்பு, மூவரும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். பின்னர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, இனி ஒருபோதும் உனது பிள்ளைகளை நீ பார்க்க முடியாது என மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
மேலும் குடும்பத்தை சீரழித்துவிட்டாய் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். கணவரிடம் இருந்து வந்த குறுந்தகவலை பார்த்த அவர் உடனடியாக பிள்ளைகளின் படுக்கை அறைக்கு ஓடியுள்ளார். அங்கே பிள்ளைகளின் சடலத்தை பார்த்துள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு இத்தாலியில் உள்ள மார்க்னோ என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
12 வயதேயான இரட்டையர்கள் எலெனா மற்றும் டியாகோ ஆகிய இருவரையும் கொன்றுவிட்டு, 45 வயதான மரியோ ப்ரெஸி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
எலெனாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, சிறுவன் டியாகோவை தலையணையால் மூச்சைத் திணறடித்து கொன்றிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் இருவரும் தூக்கத்தில் கொல்லப்பட்டுள்ளதால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு மயக்கமடைந்தார்களா, மற்றும் கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து இத்தாலிய அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சனைகளால் இருவரும் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இருப்பினும் ஒருமுறை கூட ப்ரெஸி வன்முறையை தூண்டியதில்லை என கூறப்படுகிறது.
எலெனா மற்றும் டியாகோவின் மரணத்திற்கான சரியான நேரத்தையும் காரணத்தையும் கண்டறிய விசாரணை அதிகாரிகள் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.