சகோதரரின் மொத்த சொத்தையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய பிரித்தானியர்: நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி!!

850

பிரித்தானியாவில் தமது சகோதரரின் மொத்த சொத்துக்களையும் தங்க நாணயங்களாக மாற்றி ஏழைகளுக்கு தானமாக வழங்கிய நபரிடம், அந்த தொகையை அவரது குடும்பத்தாருக்கு திருப்பிச் செலுத்த தீர்ப்பாகியுள்ளது.

பிரித்தானியரான 58 வயது பீற்றர் ஐவரி என்பவரிடமே, நீதிமன்றம் தற்போது அவர் தானமாக ஏழைகளுக்கு அளித்த தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வாதிட்ட பீற்றர், மரணப்படுக்கையில் இருந்த தமது சகோதரர் மைக்கேலின் கடைசி ஆசை இது. தமது மரணத்திற்கு பின்னர் மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்குவது என்பது. மைக்கேல் தமது சொத்து தொடர்பில் உயில் ஏதும் எழுதி வைக்காத நிலையில், அவரது கடைசி ஆசையாக தார்மீக ரீதியாக சரியானதைச் செய்ததாக வாதிட்டார்.

மைக்கேல் ஒருபோதும் தமது குடும்பத்தாரிடமோ சகோதரர்களிடமோ நெருக்கமான தொடர்பு ஏதும் வைத்துக் கொண்டது இல்லை எனவும், அதனாலையே, கடும் உழைப்பாளிகளான ஏழைகளுக்கு தமது சொத்து முழுவதும் சென்று சேர வேண்டும் என அவர் ஆசைப்பட்டதாக தெரிவித்தார்.


இதனையடுத்து மைக்கேல் இறந்த பின்னர், அவரது சொத்து முழுவதையும் விற்று, கிடைத்த 367,000 பவுண்டுகள் தொகையை தங்க நாணயமாக மாற்றி அதை அவர் கேம்பிரிட்ஜ், ஐல் ஆஃப் வைட் மற்றும் ஸ்கொட்லாந்தின் தெருக்களில் ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்ததாக தெரிவித்துள்ளர்.

இருப்பினும், வடமேற்கு லண்டனைச் சேர்ந்த ஐவரிக்கு இதைச் செய்ய உரிமை இல்லை என்றும், அந்தப் பணத்தை அவர்களது மற்ற உறவினர்களுடன் பிரித்திருக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மைக்கேலின் சொத்துக்களை நிர்வகிப்பதில் ஒரு மாபெரும் பிழையை செய்துள்ள ஐவரி 250,000 பவுண்டுகள் தொகையை மூன்றாக பிரித்து செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் 100,000 பவுண்டுகள் தொகையை ஆலன் என்ற ஒரு சகோதரருக்கும், 95,000 பவுண்டுகல் தொகையை ஜான் என்ற ஒரு சகோதரருக்கும், 50,000 பவுண்டுகள் தொகையை உறவினர் மைக்கேலுக்கும் அளிக்க தீர்ப்பாகியுள்ளது.

மரணப்படுக்கையில் இருந்த மைக்கேலை எஞ்சிய சகோதரர்களோ உறவினர்களோ கவனிக்கவில்லை என கூறும் பீற்றர், அதனாலையே, அவர் தம்மிடம் உறுதி பெற்றுக்கொண்டார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.