தடையை மீறி பயன்படுத்தினால் கடும் தண்டனை..! 59 செயலிகளுக்கும் அதிரடி உத்தரவு போட்ட அரசு..!

1139

கடந்த மாதம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அனைத்து 59 சீன செயலிகளையும், அரசின் உத்தரவை கடுமையாக மதிக்க அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரசு எச்சரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக்டாக், ஷேர் இட், ஹெலோ, ஷெய்ன், லைக்கீ, வி சாட், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு முழுமையான தடை அறிவித்துள்ளது.

ஆதாரங்களின்படி, இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் ஐ.டி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. இந்த தடைசெய்யப்பட்ட செயலிகள் தொடர்ச்சியாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் குற்றமாகும். அவ்வாறு செயல்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் எச்சரித்துள்ளது.


தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள எந்தவொரு செயலிகளும் இந்தியாவுக்குள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு வழியிலும் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்தால், அது அரசாங்க உத்தரவுகளை மீறுவதாகக் கருதப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமைச்சகத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளன.

இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் கோடிக்கணக்கான நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய இணைய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை ஆகும்.

சீனத் துருப்புக்களுடன் லடாக்கில் நடந்த மோதலின் பின்னணியில் இந்தத் தடை வந்தது. ஜூன் மாதத்தில், கால்வான் பள்ளத்தாக்கில் சீனர்களுடன் நடந்த கடுமையான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.