நள்ளிரவில் தகராறு.. கிணற்றில் குதித்த புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

311

சேலத்தில்..

சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருள் முருகன் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அருள் முருகனுக்கு குடி பழக்கம் உள்ளதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, தம்பதி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் அருள் முருகன் மனைவி அபிராமியை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிராமி அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த அருள் முருகன் அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார்.

போதையில் இருந்ததால் அருள் முருகனால் மனைவி அபிராமியை காப்பாற்ற முடியாத சூழலில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் தீயணைப்பு துறையினருடன் வந்து நள்ளிரவு முதல் இருவரது உடலை தேடிய நிலையில்,


அதிகாலையில் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆகும் நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.