பிரித்தானியா இதற்கு கண்டிப்பாக வருந்தும்: எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

837

வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியதற்காக பிரித்தானியா உரிய விலையை தர வேண்டி இருக்கும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட கொரிய சிறை முகாம்களில் கட்டாய வேலை, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றில் ஈடுபட்ட குழுக்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது.

இதில் ஆத்திரமடைந்த கிம் ஜாங் வுன் தலைமையிலான வடகொரியா நிர்வாகம், அமெரிக்காவின் கைப்பாவையான பிரித்தானியா அரசு ஒரு ஆத்திரமூட்டும் செயலைச் செய்துள்ளது என காட்டமாக பதிவு செய்துள்ளது.

வடகொரியாவில் செயல்பட்டுவரும் மாநில பாதுகாப்பு பணியகம் 7 மற்றும் மக்கள் பாதுகாப்பு திருத்த பணியகம் ஆகிய இரு குழுக்களின் மீதும் பிரித்தானியா தற்போது நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.


பிரித்தானியாவின் புதிய உலகளாவிய மனித உரிமை ஆட்சியின் கீழ் முதல் தடைகளின் ஒரு பகுதி இதுவென கூறப்படுகிறது.

வடகொரியாவின் இந்த இரு மர்ம குழுக்களின் மீது மட்டுமல்ல, ரஷ்யாவில் இயங்கும் இதுபோன்ற 25 குழுக்கள் மீதும், சவுதி அரேபியாவில் செயல்படும் 20 குழுக்கள் மீதும் தடை விதித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் சமீபத்திய நடவடிக்கையானது அமெரிக்காவின் விரோதக் கொள்கையை ஆதரிப்பதற்கான ஒரு அப்பட்டமான அரசியல் சதி என்று வட கொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு விவகாரங்களில் வன்முறை தலையீடு என நமது நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பான நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க இங்கிலாந்து துணிந்ததை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், நிராகரிக்கிறோம் என அந்த அறிக்கையில் வட கொரிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் அல்லது அந்த நாடு மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் குறித்து சமரசம் காண வட கொரியாவும் அமெரிக்காவும் தவறிவிட்ட நிலையில், பிரித்தானியாவின் இந்த அதிரடி முடிவு வடகொரியாவை ஆத்திரமூட்ட செய்துள்ளது.