பொதுமக்கள் வீட்டிலேயே இருங்கள்…! ஆயுதங்களுடன் ஆபத்தான நபர்: புகைப்படம் வெளியிட்டு எச்சரித்த ஜேர்மன் பொலிஸ்!!

924

ஜேர்மனியில் கிராமம் ஒன்றில் பொலிசாரின் ஆயுதங்களை பறித்துக் கொண்டு தப்பிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முடிந்தால் குடியிருப்பிலேயே இருங்கள் என வேண்டுகோள் விடுத்த ஜேர்மன் பொலிசார், சாலையில் சந்தேக நபர்கள் எவரேனும் உங்கள் வாகனத்தை நிறுத்த முயன்றால் கண்டுகொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஜேர்மனியில் Oppenau கிராமத்தில் வைத்து பொலிசாரின் ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் தப்பிய 31 வயது Yves Rausch என்பவரை சிறப்பு படைகளின் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி பகலில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக Yves Rausch-ன் புகைப்படத்தையும் வெளியிட்டு, பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.


இந்த நேரத்தில், அந்த ஜேர்மானியர் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை உங்களால் மதிப்பிட முடியாது என கூறியுள்ள பொலிசார், ஓபெனாவ் மற்றும் ஓபர்கிர்ச் கிராமங்களில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டில் தங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒபெனாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ராணுவத்தினர் பயன்படுத்தும் உடையில் ஆயுதமேந்திய நபர் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நான்கு பொலிசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். முதலில், அந்த நபர் பொலிசாருக்கு ஒத்துழைப்பதாக பாவனை செய்தார். ஆனால் திடீரென்று அவர் தனது துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை குறிவைத்தார்.

பொலிசார் சுதாரிக்கும் முன்னர் அவர்களை மிரட்டி, அவர்களின் ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் மறைந்துள்ளார் Yves Rausch.

அப்போதிருந்து, பொலிசார் தேடி வருகின்றனர். பின்னர் புகைப்படம் வெளியிட்டு, பொதுமக்களை எச்சரித்ததுடன், ஹெலிகொப்டர் மற்றும் சிறப்பு படையினரையும் தேடுதலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Yves Rausch கடைசியாக வசித்த குடியிருப்பில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்பு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஜெர்ரி கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.