போட்டோ ஷூட் எடுக்க மறுத்த பெற்றோர்… விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

252

பெங்களூரு…

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, புது வருஷத்தில் மால் ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி படித்து வரும் மகளிடம், புது வருட கூட்டத்தில் வேண்டாம்… பிறகொரு நாளில் எடுத்துக் கொள் என்று பெற்றோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததால் கல்லூரி மாணவி வர்ஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சுதாமா நகரில் வசித்து வருபவர் வர்ஷினி (21). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வரும் வர்ஷினி, போட்டோக்ராஃபி படிப்பும் படித்துள்ளார். இந்த சூழலில் போட்டோஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி இப்படி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை புத்தாண்டுக்காக மாலில் இருந்து போட்டோஷூட் எடுக்க எண்ணியுள்ளார். இதனை தனது பெற்றோரிடம் ஞாயிற்றுகிழமை காலையில் கூறவே, அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கடுமையாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.


நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். அப்படியும் திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, தற்கொலை செய்துகொண்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மாணவியின் செல்போனை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.