மண்டை ஓட்டை துளைத்துக் கொண்டு பாய்ந்த குண்டுகள்!… காப்பாற்றிய மருத்துவர்கள்!!

1062

இந்தியாவில் நபர் ஒருவரின் தலையில் பாய்ந்த குண்டுகளை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

டெல்லியின் சோனியா விஹார் பகுதியை சேர்ந்தவர் ராதே ஷ்யாம்(வயது 39), கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மார்க்கெட்டுக்கு சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஷ்யாமை சுட்டார்.

இதில் குண்டுகள் தலையில் பாய, சுய நினைவை இழந்தார் ஷ்யாம், முதலில் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் கடந்த 4ம் திகதி சிர் கங்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருடைய தலையில் மண்டை ஓட்டிற்கு உள்ளே வெளியே என பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டினால் பலத்த காயங்களும், துப்பாக்கி குண்டின் துகள்களும் இருப்பதை கண்டுபிடித்தனர்.


அதுமட்டுமின்றி ஹெமிஸ்பெயர் பகுதியில் அடிபட்டிருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தீர்மானித்தனர். இதன்படி, ஷ்யாமின் எலும்பு மடலை அகற்றிய போது துப்பாக்கி குண்டு சிதறி பல துகள்களானது கண்டறியப்பட்டது. மூளையின் இடதுபகுதியையும் பாதித்திருந்ததால் அப்பகுதி வீக்கமடைய தொடங்கியதுடன் ரத்தகட்டிகளும் உருவாகியிருந்தன.

மிக சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கும் போதே ரத்தப் போக்கும் அதிகரித்தது. இதை அனைத்தையும் தாண்டி மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.

இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த ஷ்யாம் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.