மனைவியின் இன்ஸ்டா மோகம்… ரீல்ஸ் போடுவதைக் கண்டித்த கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

293

பீகார்…

பீகார் மாநிலம், கோடாபந்த்பூர் பகுதி அருகில் இருக்கும் பெகுசராய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி குமாரி. இவருக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்வர் என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவேற்றியிருக்கிறார். அதை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத மகேஷ்வர், ஒருகட்டத்தில் தன் மனைவி அதிலேயே அதிக நேரம் செலவிடுவதைக் கண்டு கோபமடைந்திருக்கிறார்.

இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ராணி குமாரி, தனது அம்மா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சில நாள்களுக்குப் பிறகு ராணி குமாரியைப் பார்க்க மகேஷ்வர் சென்றிருக்கிறார்.


ஆனால், அப்போதும் ராணி குமாரி ரீஸ்ல் செய்து பதிவேற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியிருக்கிறது. இந்த கோபத்தில், ராணி குமாரியும், அவரின் தாயாரும் சேர்ந்து மகேஷ்வரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார்கள்.

அதே தினம், யதார்த்தமாக மகேஷ்வரின் அண்ணன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது, வேறு ஒருவர் பேசியிருக்கிறார். இதனால், உடனே பெகுசராய் சென்ற மகேஷ்வரின் அண்ணனுக்கு அவரின் சடலத்தைக் காண்பித்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, இது தொடர்பாகக் காவல் நிலையத்துக்குத் தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, உடலைக் கைப்பற்றி, ராணி குமாரியையும், அவரின் தாயாரையும் கைதுசெய்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.