மனைவியை கொலை செய்ய முதலில் ஜூஸ்! அதன் பின் ஊசியை வைத்து… கேரளா சம்பவத்தை மிஞ்ச வைத்த கணவன்!!

1028

தமிழகத்தில், மனைவியின் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்து கட்ட முயன்ற கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். களியக்காவிளை அருகே மெதுகும்மல் பொன்னப்ப நகரை சேர்ந்தவர் ரசாலம். இவருக்கு ஜாஸ்பின் ஷைனி என்ற 30 வயது மகள் உள்ளார்.

எம்.ஏ. பட்டதாரியான ஜாஸ்பின் ஷைனிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில், இவருக்கும் மார்த்தாண்டம் அருகே தோட்டவாரம் காவுவிளையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜ் மகன் மெர்லின் ஜெபராஜ் (40) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் திகதி 2-வது திருமணம் நடைபெற்றது.

மெர்லின் ஜெபராஜ் பணகுடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு ஜாஸ்மின் ஷைனிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவரமும், ஒரு ஆண் குழந்தை உள்ளது என்ற விவரமும் மெர்லின் ஜெபராஜ், அவருடைய உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஜாஸ்மின் ஷைனியின் மகனை தன்னுடன் தங்க வைத்து பராமரிப்பதாக மெர்லின் ஜெபராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருமணத்திற்கு பின்பு ஜாஸ்மின் ஷைனி தனது மகனுடன் கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.


சில நாட்கள் கடந்து மெர்லின் ஜெபராஜ் தனது மனைவி ஜாஸ்மின் ஷைனியையும், அவரது மகனையும் சித்ரவதை செய்ய தொடங்கினார். ஒரு கட்டத்தில், சிறுவனை இறகு பந்து பேட்டால் அடித்து, இரவு நேரங்களில் வெளியே தள்ளி துன்புறுத்தி, கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், சிறுவனை ஜாஸ்மின் ஷைனியின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளார்.அதன்பின்பு மெர்லின் ஜெபராஜ், மனைவியின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு எழுதி தர கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஜாஸ்மின் ஷைனி தூங்க சென்ற போது அவரது மாமியார் ஜெஸ்டின் பாய் ஜூஸ் குடிக்க கொடுத்தார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால், ஜூசை குடித்த சில நிமிடங்களில் ஜாஸ்மின் ஷைனி மயங்கினார். மறுநாள் காலையில் எழுந்த போது அவருக்கு முச்சு திணறல் ஏற்பட்டது.

மேலும் பின்பக்க இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துள்ளார். அதன் பின், தனது தந்தையிடமும், மகனிடமும் போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த மெர்லின் ஜெபராஜ் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். தொடர்ந்து ஜாஸ்மின் ஷைனியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் தாக்கியதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜாஸ்மின் ஷைனி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, ஜாஸ்மின் ஷைனியின் உடலில் ஊசி மூலம் காற்று செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அவர் மாமியார் கொடுத்த ஜூசை குடித்து மயங்கி கிடந்த போது, அவருடைய கணவர் ஜாஸ்மின் ஷைனியின் இடுப்பில் மருந்து எதுவும் இல்லாமல் காற்று அடைக்கப்பட்ட ஊசியை 2 முறை குத்தியுள்ளார். அதனால் மாரடைப்பு ஏற்பட வைத்து அவரை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மெர்லின் ஜெபராஜ், மாமனார் சவுந்தர்ராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய் ஆகிய 3 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும், சமீபத்தில் கேரளாவில் மனைவியை, கணவன் பாம்பை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் அதை மிஞ்சும் வகையில் உள்ளது.