மாணவி கொலை வழக்கு : `என் மகனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’- கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட தந்தை!!

71

கர்நாடக மாநிலம், ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். இவரின் மகள் நேஹா ஹிரேமத் (23). கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அவருடன் படித்த ப‌யாஸ் (23) ஏப்ரல் 18-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ஹுப்ளி காவல்துறை பயாஸை கைது செய்து விசாரித்தபோது, “நேஹா முதலில் என்னைக் காதலித்தார். பின்னர் குடும்பத்தினரின் எதிர்ப்பால் பிரிந்து சென்றார். திருமணம் செய்ய மறுத்ததால் அவரை கொலை செய்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ப‌யாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க, அதன் கிளை அமைப்புகளான ஏ.பி.வி.பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர், ‘`கர்நாடகாவில் லவ் ஜிகாத் அதிகரித்துவிட்டதாக” தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது கர்நாடகாவில் காங்கிரஸ் Vs பா.ஜ.க என அரசியல் களமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியரும், பயாஸின் தந்தையுமான பாபா சாஹேப் சுபானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “நானும் எனது மனைவியும் கடந்த 6 வருடங்களாக தனித்தனியாக வசித்து வருகிறோம். பயாஸ் அவனுடைய தாயுடன் தங்கியிருந்தான்.


குடும்பத்துக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் என்னை அழைப்பான். கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்பு அவனிடம் பேசினேன். எட்டு மாதங்களுக்கு முன்பு, நேஹா ஹிரேமத்தின் குடும்பத்தினர் எனது மகன் தங்கள் மகளைத் தொந்தரவு செய்வதாகத் தெரிவிக்க எனக்கு அழைத்தார்கள்.

பயாஸும் நேஹாவும் ஒருவரையொருவர் விரும்புவதாகக் கூறினார்கள். வியாழன் மாலை 6 மணியளவில்தான் இந்த சம்பவம் குறித்து எனக்குத் தெரிந்தது. என் மகனின் செயலால் முற்றிலும் அதிர்ச்சியடைந்து உடைந்துவிட்டேன்.

எதிர்காலத்தில் யாரும் இது போன்ற செயலைச் செய்யத் துணியாத வகையில் பயாஸ் தண்டிக்கப்பட வேண்டும். நேஹாவின் குடும்ப உறுப்பினர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நேஹா என் மகள் போன்றவர்.

பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கொடுமைகளை யாரும் செய்ய வேண்டாம். கர்நாடக மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். என் மகன் தவறு செய்துவிட்டான். அவன் நாட்டின் சட்டத்தால் தண்டிக்கப்படுவான், அதை வரவேற்கிறேன்.

என் மகனால் என் ஊருக்குக் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது. முனவல்லி மக்கள் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” எனக் கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.