யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கோரிய நிலையில் குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
அதன் பின்னர் ஒரு மாதமாக இளைஞன் தொடர்பு கொள்ளாத நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி கடந்த 21 ஆம் திகதி இரவு வீட்டில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.இதனையடுத்து உடனடியாக அவரை அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த யுவதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.