ஹோட்டலில் பெண்ணைக் கொன்று சடலத்தை பையில் அடைத்து தப்ப முயன்ற நபர்!!

40

இமாச்சல பிரதேச மாநிலம், மணாலியில் ஹோட்டல் ஒன்றில், பெண்ணைக் கொன்று பையில் சடலத்தை திணித்துக்கொண்டு, தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஹரியாணாவைச் சேர்ந்த வினோத் என்ற நபரும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதல் என்ற பெண்ணும், மணாலியின் கோம்பா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 13ம் தேதி சென்றனர். இந்த ஜோடி இரண்டு நாட்களுக்கு அறையை முன்பதிவு செய்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, வினோத் மட்டும் அறையை காலி செய்துவிட்டு, பேருந்து நிலையம் செல்வதற்கு டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால், அவருடன் வந்த சீத்தலை காணாததைக் கண்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது வினோத்தை கூர்ந்து கவனித்ததில், அவர் ஒரு கனமான பையை தன்னுடன் எடுத்துச் சென்றார்.

இதில் ஏதோ மர்மம் இருப்பதை யூகித்த ஹோட்டல் ஊழியர்கள், இதுகுறித்து போலீஸாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த வினோத், தான் வைத்திருந்த பையை டாக்ஸியில் போட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.


போலீஸார் வந்து பையை திறந்து பார்த்த போது அதில் சீத்தல் சடலமாக அடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அறையை பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் சீத்தல் பெயரில் முன்பதிவு செய்திருந்ததால், குற்றவாளியைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வினோத்தை அன்று இரவே கைது செய்தனர். தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வினோத், சீத்தலை ஏன் கொலை செய்தார், இருவருக்கும் இடையேயான உறவு முறை என்ன, அவர்களுக்குள் என்ன தகராறு போன்றவை குறித்து, வினோத்திடம் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.