அலறும் மாப்பிள்ளைகள்… துப்பாக்கி முனையில் தூக்கிச்சென்று கட்டாயத் திருமணம் : பகீர் சம்பவம்!!

54

பீகார்….

பீகார் மாநிலத்தின் புதுவித டிரெண்டாக, துப்பாக்கி முனையில் மாப்பிள்ளைகளை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கத்திய கல்யாண வயது இளைஞர்கள் பலரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் மட்டுமே பார்க்க வாய்ப்புள்ள அதிரடிகள் பலவும் பீகார் மாநிலத்தில் அரங்கேறுவது வழக்கம். அவற்றில் புதுவிட டிரெண்டாக கல்யாண வயது இளைஞர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு கட்டாயத் திருமணம் செய்வது வளர்ந்து வருகிறது.

இதற்காக கடத்தல் மட்டுமன்றி, மேற்படி மாப்பிள்ளையை அடித்து துவைத்து கட்டாயக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறார்கள். அதன் பின்னர், தாங்கள் கட்டிய தாலி, மணமகளின் அழகு, மாமனார் கையிலிருக்கும் துப்பாக்கி இவற்றுக்கு அடிபணிந்து இல்லற வாழ்க்கையில் அந்த ஆண்கள் ஆச்சரியமாய் தொடரவும் செய்கிறார்கள்.


பீகார் காவல்துறையின் சட்டம் ஒழுங்குக்கு சவாலாகும் இந்த மாப்பிள்ளைக் கடத்தலில் அண்மையில் ஒரு சம்பவம் பெரும் விவகாரமாகி இருக்கிறது. கௌதம் குமார் என்பவர் அண்மையில் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பதவியேற்றிருந்தார். புதனன்று அதிரடியாய் 4 பேர், அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பறையில் நுழைந்து நான்கு தட்டுத்தட்டினார்கள்.

கௌதம் திமிற முயற்சிக்கவே, துப்பாக்கியை எடுத்து நீட்டினார்கள். அங்கிருந்து அப்போது கடத்தப்பட்ட கௌதம் அடுத்த 24 மணி நேரத்தில், துப்பாக்கி வைத்திருந்தவரின் மகள் கழுத்தில் தாலியைக் கட்ட வேண்டியதானது.

‘பகத்வா விவாஹ்’ எனப்படும் ’மணமகன் கடத்தல் கல்யாணம்’ என்பது பீகாரின் பின்தங்கிய மாவட்டங்களில் பரவலாக அதிகரித்து வருகிறது. வைஷாலி மாவட்டம் படேபூரின் ரெபுராவில் செயல்படும் உத்கிராமித் மத்திய வித்யாலயாவில் இளம் ஆசிரியராக கௌதம் குமார் சேர்ந்திருக்கும் தகவல் எப்படியோ தீயாய் பரவி இருந்தது. ஊரின் பின்னணியை முழுதாய் உணர்வதற்குள், துப்பாக்கி முனையில் அவரது கட்டாயக் கல்யாணமும் நடந்து முடிந்துவிட்டது.

கௌதம் குமாரின் மாமனார் ராஜேஷ் ராய், தனது மகள் சாந்தினியுடன் மாப்பிள்ளை அன்போடு இருக்கிறாரா, பள்ளிக்கு ஒழுங்காக சென்று வீடு திரும்புகிறாரா என்பதை கண்காணிக்க தனது துப்பாக்கியுடன் 2 பேரை கண்காணிப்புக்கு நியமித்திருக்கிறார்.

ஆனால் காவல்துறைக்கு அப்பால் நீதிமன்றத்தை நாடினால், கட்டாயத் திருமணத்திலிருந்து மாப்பிள்ளைகள் விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. நவாடாவில் ஒரு ராணுவ வீரர் இப்படித்தான் லக்கிசராய் என்ற பெண்ணுக்கு கடத்தல் கல்யாணம் செய்விக்கப்பட்டார்.

’நான் பார்க்காத துப்பாக்கியா’ என அந்த ராணுவ வீரர் பாட்னா உயர் நீதிமன்றத்தை நாட, கட்டாய கல்யாணத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ராணுவ வீரர் அளவுக்கு பின்னணி வாய்த்திராதவர்கள், மாமனாரின் துப்பாக்கிக்கு பயந்து சமர்த்தாக வாழவும் செய்கிறார்கள்.