என் புள்ளைங்கள கண்டுபிடிச்சு கொடுங்க.. கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தாய்!!

103

மதுரை….

மதுரை கூடல் நகரில் வசித்து வருபவர் வெல்டிங் தொழிலாளி ராஜா. இவரது மனைவி ராஜம். இவர் டெய்லரிங் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு ரித்திக் ரோசன் , ஆதவன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் 11ம் வகுப்பும், இளைய மகன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டதால் இவர்களது பூர்வீக ஊரான குமரி மாவட்டம் குளச்சலுக்கு சென்று விட்டனர். ஆனால் ராஜம் மட்டும் அடிக்கடி மதுரை வந்து டெய்லரிங் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு, குளச்சலில் தனது 2 மகன்களுடன் பேருந்து நிலையம் சென்றார் ராஜம். மகன்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவர் பேருந்தில் ஏறி மதுரை புறப்பட்டார்.


ஆனால், மகன்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்த ராஜமும், அவரது கணவரும் பல இடங்களில் தேடியும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். 25 நாட்களாகியும் கண்டு பிடிக்க முடியாததால் ராஜம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், தனது மகன்கள் இருவரும் கடலில் விழுந்து இறந்து விட்டதாகவும், அவர்கள் உடல் பாறையில் சிக்கி உள்ளதாகவும் போலீசார் கூறுவதாக ராஜம் தெரிவித்தார்.

பாறையில் சிக்கிய சடலத்தையாவது மீட்டுத்தாருங்கள் எனக் கேட்டாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறி ராஜம் தர்ணாவில் ஈடுபட்டார்.