காணாமல் போன 15 லட்சம்… வேலை பார்த்த இடத்திலேயே கைவரிசை காட்டிய கணக்காளர்!!

319

சென்னை…

சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோடு, பாட்டியா பேலஸ் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளராக திலகவதி பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்த்தபோது, ​​15,11,000 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, ​​அங்கு கணக்காளராகப் பணிபுரியும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த யுவன்சங்கர் (23) என்பவர் அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கும், மேலும் சிலரது வங்கிக் கணக்குகளுக்கும் பணம் அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆதாரங்களுடன், திலகவதி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


போலீசார் வழக்கு பதிவு செய்து யுவன்சங்கரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது தோழி சிந்துவின் (21) வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, நிறுவனத்தின் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்த குற்றத்திற்காக கணக்காளர் யுவன்சங்கர் மற்றும் அவரது தோழி சிந்து ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மோசடி பணத்தில் வாங்கிய டிவி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,20,000. இந்த மோசடி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.