குழந்தைக்காக காத்திருந்த பில்கிஸ்.. குதறிய இந்துத்துவ கலவர கும்பல்.. குஜராத் கலவரத்தின் கண்ணீர் கதை!!

207

பில்கிஸ் பானு….

பில்கிஸ் பானு வழக்கில் முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கும் இந்த நிலையில், குஜராத் கலவரத்தின் பில்கிஸ் பானுவுக்கு நிகழ்ந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி.. எல்லா நாட்களை போன்றே அமைதியாகவே விடிந்தது. ஆனால், அதே அமைதியோடு அந்த நாள் முடியவில்லை. 22 ஆண்டுகள் கடந்தும் முடிவில்லா துயரத்திற்கான தொடக்கம் அந்த நாளில் ஏற்பட்டது. ஆம், குஜராத் மாநிலம் கோத்ராவுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. 59 இந்து யாத்திரிகர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சபர்மதி ரயிலை எரித்தது முஸ்லிம்கள்தான் என்ற தகவல் குஜராத் முழுவதும் காட்டுத்தீயாக பரவ, அதே நாளில் குஜராத்தின் பல இடங்கள் பற்றி எரியத் தொடங்கின. இந்துத்துவ அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல்களை தொடங்கினர். நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக முதல் முறை பதவியேற்ற சில மாதங்களிலேயே காவல்துறை என்ற ஒன்று உள்ளதா என்று சந்தேகப்படும் அளவுக்கு தங்கு தடையின்றி கோரத் தாக்குதல்கள் அரங்கேறின.


2 வாரமாக தொடர்ந்த வன்முறையில் 20,000 முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், 360 மசூதிகள் தகர்க்கப்பட்டன. ஒன்றரை லட்சம் பேர் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள உடைமைகளையும், வசிப்பிடங்களையும், தொழிலையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். 28 ஆம் தேதி வெடித்த வன்முறை மார்ச் வரை அடங்கவில்லை. இந்த கலவரத்தின் பல ஆயிரக்கணக்கான கொடூரங்களும், துயர சம்பங்கள் அரங்கேறின. அதில் ஒன்றுதான் உலகையே உலுக்கிய பில்கிஸ் பானுவுக்கு அரங்கேறிய பயங்கரம்.

குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமம்தான் பில்கிஸின் சொந்த ஊர். அப்போது 19 வயதான பில்கிஸ் பானு ஐந்து மாத கர்ப்பிணி. இன்னும் 4 முதல் 5 மாதங்களில் பில்கிஸ் ஈன்றெடுக்கப்போகும் குழந்தைக்காக காத்திருந்தது அவரது குடும்பம். அப்போது பில்கிஸுக்கும் அவரது குடும்பத்துக்கும் தெரியாது. அந்த குழந்தைக்கு கருவரையே மண்ணரையாகும் என்று. மார்ச் 3 2022 அன்று நடந்த அந்த அக்கிரம செயல் கல் நெஞ்சையும் கலங்க செய்துவிடும்.

கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி இந்துத்துவ கும்பல் பில்கிஸின் சொந்த ஊருக்கும் வந்தது. பயங்கர ஆயுதங்களுடன் வந்த 30 பேர் கொண்ட கலவர கும்பலை கண்ட பில்கிஸ் பானு என்ன நடக்கிறது என்ற உணர்வதற்குள் கொடூர தாக்குதல்களுக்கு ஆளானார். அவரையும் அவரது பெண் குழந்தையும், 15 குடும்ப உறுப்பினர்களையும் ரத்தம் தெறிக்க தெறிக்க தாக்கியது அந்த கொடூர கும்பல். பில்கிஸின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

பில்கிஸ் பானு, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கலவரத்தில் ஈடுபட்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு 11 பேருக்கும் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.

இந்த நிலையில்தான் 11 குற்றவாளிகளும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது. இவர்களின் விடுதலையை இந்துத்துவ அமைப்பினர் ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளித்தது நாட்டையே கொந்தளிக்க வைத்தது. இவர்களின் விடுதலைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்விடுதலையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலக் காரணமாக கோத்ரா சம்பவம் தொடர்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாலேயே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கூறியது. ஆனால், அதற்கும் முன் பரவிய வதந்தி, தீயாக மாறி வரலாற்றிலேயே அழிக்க முடியாத மோசமான மதவெறி கொலைகளுக்கு காரணமாகி இருக்கிறது.