கூட்டம் கூட்டமாக சாலையை கடந்த யானைகள்… குறுக்கே வந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

94

கிருஷ்ணகிரி….

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த 50 யானைகளை விரட்டும் பணியை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் யானை கூட்டம் இரண்டு குழுக்களாக பிரிந்து சாலையை கடந்து சென்றுள்ளன.

இதனால், சாலையில் வாகன போக்குவரத்தை சிறிது நேரத்திற்கு வனத்துறையினர் நிறுத்தனர். யானைகள் அனைத்துமே முழுமையாக சாலையை கடந்து சென்று விட்டதாக நினைத்து வனத்துறையினர் மீண்டும் வாகன போக்குவரத்தை அனுமதித்தனர். அப்போது, மரக்கட்டா என்ற இடத்தில் மேலும் 5 யானைகள் சாலையோரம் கடந்து சென்றதை வனத்துறையினர் சரியாக கவனிக்கவில்லை.

அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியதால் நின்றிருந்த யானைகளும் சாலையை கடப்பதற்கு முற்படும் நேரத்தில், தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி அருகே உள்ள ஏரிகோடி கொட்டாய் கிராமத்தைசேர்ந்த அருள்குமார் (வயது 23) இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக இரண்டு யானைகள் திடீரென சாலை கடக்க ஓடி வந்த போது ஒரு யானை இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அருள்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். வனத்துறையினரின் அலட்சியமான நடவடிக்கையின் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக இறந்த அருள்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.