கொடுக்காப்புளி பறிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

1052

விருதுநகர்..

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவருடைய மகன் சிவபிரசாத் (வயது 12). இவர் அருகேயுள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, ஏழாம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.

இந்த நிலையில், பள்ளிக் கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மாவட்டம், பருவக்குடியை அடுத்த பால்வண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகன் சரண் (8) விடுமுறையைக் கொண்டாட உறவினரான சிங்கராஜின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வழக்கம்போல சிவபிரசாத்தும் சரணும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

விளையாட்டின்போது அச்சங்குளம் கண்மாய்க்குச் செல்லும் ஓடைக்கரையிலிருந்த மரத்தில் ஏறி சிறுவர்கள் கொடுக்காப்புளி பறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக சிவராஜ், சரண் ஆகியோர் தவறி ஓடைக்குள் இருந்த கிடங்கில் விழுந்திருக்கின்றனர்.


சிறுவர்கள் இருவரும் கிடங்கிலிருந்து வெளிவர முடியாமல் தவித்திருக்கின்றனர். உடன் சென்ற நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாததால், ஊருக்குள் சென்று உறவினர்களை அழைத்து வந்திருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் வருவதற்குள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து உறவினர்கள்வந்து நீரில் மூழ்கிக்கிடந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவலறிந்ததும் சிவராஜ் வீட்டைச் சுற்றிலும் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் எஸ்.ராமலிங்காபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.