கோழி குருமாவில் மயக்க மருந்து… அசந்த நேரத்தில் இளம்பெண் செய்த மோசமான செயல்!!

749

கோவையில்..

கோவையில் 2.5 கோடி ரூபாய் பணம், 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலணி பகுதி சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 60 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலமாக ராஜேஸ்வரியுடன் அறிமுகமாகியுள்ளார். இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்த நிலையில், ராஜேஸ்வரியிடம் வர்ஷினி நெருக்கமாகப் பழகியுள்ளார்.

மேலும் தனக்குத் தெரிந்த இடைத்தரகர்கள் எனக்கூறி அருண்குமார், சுரேந்தர், பிரவீன் என மூன்று பேரைக் ராஜேஷ்வரிக்கு வர்ஷினி அறிமுகம் செய்து வைத்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் வர்ஷினி மற்றும் இடைத்தரகர்கள் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர்.

அப்போது ராஜேஸ்வரியைத் தூங்க வைத்து விட்டு வர்ஷினியும் அவருடன் இருந்த 3 நபர்களும் ராஜேஸ்வரி வீட்டில் இருந்த 2.5 கோடி ரூபாய் பணம், 100 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.


வீட்டில் இருந்த பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதினர்.

இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அருண்குமார் தனது நண்பர் கார்த்திக், சுரேந்திரன் என்பவரிடம் 33 லட்ச ரூபாய் பணம் மற்றும் 31 சவரன் நகைகளைக் கொடுத்து வைத்து இருந்தது தெரிந்தது.

பணத்தை எடுத்து வரும் போது சேலத்தில் வைத்து ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றதாக 31 லட்சம் ரூபாயினை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுரேந்தரிடம் இருந்து 2 லட்சம் பணம் மற்றும் 6 ஜோடி தங்கத் நகைகளைத் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரைத் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்களிடம் தான் மீதமுள்ள பணமும் நகைகளும் இருப்பதாகக் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். வர்ஷினியை தனக்கு 4 ஆண்டுகளாகத் தெரியும் என்று ரியல் எஸ்டேட் அதிபர் ராஜேஸ்வரி தெரிவித்து இருக்கிறார். வர்ஷினி சிக்கன் குழம்பு கொண்டு வந்து கொடுத்ததாகவும்,

அதைச் சாப்பிட்ட பின்னரே தன்னை மறந்து தூங்கியதாகவும் ராஜேஸ்வரி கூறியுள்ளார். பல கோடி கொள்ளையடித்துத் தலைமறைவாக இருக்கும் வர்ஷினியை பிடிக்கத் தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.