சாத்தான்குளம் விவகாரத்தில் இவர்கள் மட்டுமல்ல.. அறிக்கையில் வெளி வராத அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

756

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் உயிரிழந்த, சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையம் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் இருந்து தங்களுக்கு கிடைத்த தகவல்கள் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


அந்த செய்தியின்படி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 12க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சித்ரவதை சம்பவத்திலும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதே காவல் அதிகாரிகள்தான் ஈடுபட்டுள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் மூன்று பேரும், சிறுவன் ஒருவர் உட்பட 8 பேரை தொடர்ந்து 3 நாட்கள் சித்ரவதை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல துரை மற்றும் மகேந்திரன் ஆகிய சகோதர்கள் கைது செய்யப்பட்டு அதில் மகேந்திரன் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்ததாகவும், உடற்கூறு ஆய்வு செய்யப்படாமல் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி வெளியே கசிந்தால் துரையும் கொல்லப்படுவார் என போலீசார் குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.

அதேபோல் ராஜாசிங் என்பவரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் அவர் தட்டார்மடம் காவல்நிலையத்திற்கு கொலைக் குற்றவாளிகள் 7 பேருடன் சேர்த்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு வைத்து 8 பேரையும் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து நீதித்துறையிடம் தெரிவித்துள்ள ராஜாசிங், பெஞ்சில் என்னை படுக்க வைத்து போலீசாரின் நண்பர்கள் என்ற குழுவைச் சேர்ந்த இருவர் கால்களில் ஏறி அமர்ந்துகொண்டனர்.

இருவர் என் தலையையும், கைகளையும் பிடித்துக்கொண்டனர். இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் என்னை கடுமையாக தாக்கினர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் இதனை முன்னின்று நடத்தினார் என தெரிவித்துள்ளார்.

இந்த கடுமையான தாக்குதலில் ராஜாசிங்கின் இடது புட்டம் கிழியும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் கடுமையான காயங்களுடன் சாத்தான்குளம் நீதிபதி சரவணன் முன்பு ராஜாசிங் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், தூரத்தில் இருந்தே ராஜாசிங்கை பார்த்த நீதிபதி சரவணன் அவர்களுக்கு ரிமாண்ட் கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிபதி முன்பு வாயைத் திறக்கக் கூடாது என காவலர்கள் கடுமையான மிரட்டலை ராஜாசிங்கிடம் விடுத்துள்ளனர். பென்னீஸுக்கும் இதேபோல் தூரத்தில் இருந்து பார்த்தே ரிமாண்ட் கொடுக்கப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழிந்த புட்டம், மற்றும் பல காயங்களுடன் ராஜாசிங் நேரடியாக கோவில்பட்டி சிறைச்சாலைக்குத் தான் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சைக் கூட அளிக்கப்படவில்லை என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையாக தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு வரும் குற்றவாளிகளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் துணை சிறை கண்காணிப்பாளர் இருந்தது ஏன் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் இருவரும் அதே சிறையில் அடைக்கப்பட்டு இருநாட்களுக்கு பிறகு உயிரிழந்தனர் என்பதையும் செய்தி குறிப்பிட்டுள்ளது.

சாத்தான்குளம் மட்டுமின்றி தூத்துக்குடி காவல் நிலையங்கள், சாத்தான்குளம் நீதித்துறை, கோவில்பட்டி சிறைச்சாலை என தூத்துக்குடியைச் சுற்றி பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஊடங்கள் மூலம் தான் இது தன் கவனத்தில் வந்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் நீதித்துறை வசம் சென்றுள்ளதால் இந்த விவகாரத்தில் நடவடிக்கைக்கு தற்போது தனக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.