சார்ஜ் போட்டபடி பேசியதால் செல்போன் வெடித்து இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

604

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே விசித்திரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா (33). இவருடைய கணவர் பிரபாகரன் உடல்நலக் குறைவால் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கோகிலா தன் 9 வயது மகன் பிரகதீஸுடன் வசித்துவந்தார்.

கோகிலா குடும்ப வருமானத்துக்காக, கபிஸ்தலத்தில் வாட்ச், செல்போன் சர்வீஸ் கடை நடத்திவந்தார். நேற்று தன் கடையில், அவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டபடி ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அப்போது, மின் அழுத்தம் காரணமாக செல்போன் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. இதில் பற்றிய தீ மளமளவென கடை முழுவதும் பரவியதுடன், கோகிலாவின் உடலிலும் பற்றிக்கொண்ட்து.


அப்போது கோகிலா `காப்பாத்துங்க’ என்று அலறியிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றிருக்கின்றனர். ஆனாலும் உடனடியாக அணைக்க முடியவில்லை.

இதில் சம்பவ இடத்திலேயே கோகிலா உயிரிழந்தார். அத்துடன் கடைக்குள் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயில் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக கபிஸ்தலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மகன் பிரகதீஸ் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார் கோகிலா. அவருக்கு மகன்தான் உலகம்.

மகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் சர்வீஸ் கடை நடத்திவந்தவர், செல்போன் வெடித்ததில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனி பிரகதீஸின் எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை என அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.