சுத்தியலால் மனைவியை அடித்துக்கொன்று பெட்ரோல் பங்க் அதிபர் தற்கொலை!!

398

ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அம்மன் கோயில் தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (55). இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையம் பிரிவு மற்றும் காஞ்சிக்கோயில் பிரிவு ஆகிய இடங்களில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இவருக்கு கனிமொழி (எ) காந்திமதி (46) என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்.

கார்த்திக் அசாம் மாநில விமானப்படை பைலட்டாக வேலை செய்து வருகிறார். ஈஸ்வரன் வழக்கம்போல் பெட்ரோல் பங்குக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் காந்திமதியும், ஈஸ்வரனும் அறைக்குள் சென்றனர். வீட்டின் முன் பகுதியில் காந்திமதியின் தாயார் பர்வதம் (65) தூங்கினார். நேற்று காலை வழக்கம்போல் கார்த்திக் பெற்றோரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

ஆனால் இருவரும் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த கார்த்திக், இது குறித்து அருகில் உள்ள காந்திமதியின் தங்கை பாக்கியலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பாக்கியலட்சுமி சென்றார். அவரும், அங்கிருந்த காந்திமதியின் தாயாரும் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தனர். கதவு திறக்கப்படாததால், கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் காந்திமதி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.


அருகில் உள்ள ஜன்னலில் ஈஸ்வரன் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஈஸ்வரன் மற்றும் காந்திமதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டு ஈஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.