ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு(57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா(42).
இவர் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக உள்ளார். கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். பின்னர் ரூபா அன்று இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடிய்ம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணமாக ரூபா சடலமாக கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ரூபா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு நித்யா தனது கணவருடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.