திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்: ரகசியமாக பெற்றோரே புதைத்த மர்மம் என்ன?

889

திருமணமான இரண்டே ஆண்டுகளில் புதுப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதும் அவருடைய பிணத்தை அவருடைய பெற்றோர்களே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது செந்தாமரை என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தனது அம்மா வீட்டிற்கு வந்த செந்தாமரை, திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலையை அனைவரிடமிருந்தும் மறைத்த அவரது பெற்றோர் இரகசியமாக யாருக்கும் சொல்லாமல் உடலை புதைத்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தாமரையின் சடலத்தை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகுதான் செந்தாமரை கணவர் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து செந்தாமரையின் கணவர் வீட்டினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் செந்தாமரை திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அவரை சமாதானப்படுத்தி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்தது.

ஆனால் திருமணம் ஆனதிலிருந்து செந்தாமரை மிகுந்த சோகத்துடன் இருந்ததாகவும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த செந்தாமரை அம்மா வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே இது கொலையா? அல்லது தற்கொலையா? என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.