தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தாத்தா: சடலத்தின் அருகே நடுக்கத்துடன் 3 வயது சிறுவன்!!

931

இந்திய மாநிலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின்போது 3 வயது சிறுவனை எல்லை பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சொபோர் பகுதியில் இன்று விடிகாலையில் பயங்கரவாதிகளுடன் எல்லை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரர் ஒருவர் வீர மரணமடைந்ததுடன் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கொல்லப்பட்ட முதியவரின் சடலம் அருகே 3 வயதேயான சிறுவனின் அழுகை எல்லை பாதுகாப்புப் படையினரின் கவனத்தை ஈர்த்தது.

உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்ட வீரர்கள், தொடர் துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவே சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.

கடுமையான துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே சிக்கிய சிறுவன் பயந்த நிலையில் காணப்பட்டதால் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.


சிறுவன் தமது தாத்தாவுடன் ஸ்ரீநகரில் இருந்து ஹந்துவார் பகுதிக்கு காரில் பயணப்பட்ட நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்.

தாக்குதல் சம்பவம் நடப்பதை அறிந்து அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்ற நிலையிலேயே முதியவர் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு இலக்கானதாக எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து சிறுவனை எல்லை பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.