பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி… கதறித் துடிக்கும் பெற்றோர்!!

380

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளிகள் கோவிந்தராஜன், வேலு. இவர்களின் வீட்டு பிள்ளைகள் மணிவேல், சிறுமிகள் மோனிகா, ராஜலட்சுமி மூவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.

மோனிகா 5ம் வகுப்பும், ராஜலட்சுமி 9ம் வகுப்பும் படித்து வந்தனர். சிக்கனாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை பணிக்காக, சிக்கனாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டினர்.

அங்கிருந்த மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தினர். ஆனால், மண் அள்ளிய இடத்தில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படவில்லை. தொடர்ந்து 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மோனிகா, ராஜலட்சுமி, மணிவேல் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்துள்ளனர்.


ஆழம் தெரியாததால் மாணவிகள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினர். மணிவேல் மாணவிகளைத் தேடியுள்ளார். ஆனால், மாணவிகள் மேலே வரவில்லை. அதிர்ச்சி அடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டான்.

அத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டார். உடனடியாக பொதுமக்கள் அங்கு வந்து நீரில் மூழ்கிய 2 மாணவிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மாணவிகளை பரிசோதித்தபோது இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறினார். தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.