பிசியோதெரபிஸ்ட்டை தலையணையால் அமுக்கி கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி : திடுக்கிடும் வாக்குமூலம்!!

306

கோவை…

கோவை மலுமிச்சம்பட்டி அருகே பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்தது ஏன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்..

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலா இசக்கிமுத்து என்பவர், கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 37). இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.

தனலட்சுமி கடந்த டிசம்பர் 30ம் தேதி, காலையில் பாலா இசக்கி முத்து வேலைக்கு போன பின்னர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் வாய் , மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்து இருந்த 8 பவுன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்


இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். அவர்கள் கொலை நடந்த வீடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் தனலட்சுமி வீட்டிற்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்ததும், அவர்கள் நீண்ட நேரம் அதே பகுதியில் இருந்துவிட்டு சென்றதும் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய போது தான் அவர்கள், வால்பாறை சோலையார் நகரை சேர்ந்த சந்திரஜோதி (41), பெரம்பலூர் மாவட்டம் ஆயக்குடியை சேர்ந்த சுரேஷ் (39) என்பதும், கள்ளக்காதலர்கள் என்பதும் தெரியவந்தது.

வால்பாறை சோலையார் நகரை சேர்ந்த சந்திரஜோதி ஏற்கனவே திருமணம் ஆனவர். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதேபோல் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்த சுரேஷும் தனியாக வாழ்ந்து வந்தார். சந்திரஜோதிக்கும், சுரேஷுக்கும் சிறையில் இருந்த காலக்கட்டத்தில், பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் கோவை மாவட்டம் கோட்டூரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்துள்ளார்கள். அவர்கள் தான் பிசியோதெரபிஸ்ட் தனலட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது..

இதுபற்றி சந்திரஜோதி அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதன்படி, சந்திரஜோதி மீதும், சுரேஷ் மீதும் சரவணம்பட்டி போலீசில் கொள்ளை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்திருக்கிறார்கள். அப்போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் சில நாட்கள் தனலட்சுமியின் வீட்டில் தான் வாடகைக்கு சுரேஷ் வசித்து வந்துள்ளார். அப்போது தனலட்சுமி நிறைய நகை அணிந்து இருப்பார். இதனால் அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க பல நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார் சுரேஷ்.

சம்பவம் நடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று, சுரேஷும் சந்திரஜோதியுடன் தனலட்சுமி வீட்டுக்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். அப்போது சந்திரஜோதி தனலட்சுமியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறியதால் தகராறு செய்திருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சந்திரஜோதியும், சுரேஷும் தனலட்சுமியின் முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சுத்திணறடித்து கொலை செய்திருக்கிறார்கள்.

பின்னர் பீரோ உள்பட வீடு முழுவதும் தேடியிருக்கிறார்கள். ஆனால் தனலட்சுமி சொன்னபடி பணம் எதுவும் இல்லை. இதனால் தனலட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் அவரது செல்போனை கொள்ளையடித்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார். ஆனால் தனிப்படை போலீசாரின் விசாரணையில் சிக்கி உள்ளார்கள்..

ஆனைமலை பகுதியில் பதுங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடியான சந்திரஜோதி, சுரேஷ் ஆகியோரை மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.