பூட்டிய வீட்டுக்குள் சடலமாக 30 வயது இளம்பெண்!… 15 மணிநேரமாக தொடக்கூட தயங்கிய அதிகாரிகள்..!

889

தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் சடலமாக கிடந்ததால் கொரோனா பயத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் பெண் கவிதா(வயது 30, பெயர் மாற்றப்பட்டுள்ளது).

சென்னையில் வேலை செய்து வந்த கவிதா, கடந்த மார்ச் தான் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது, திருமணமாகி விவாகரத்தானவர் என்பதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மத்தூர் பகுதியில் உள்ள சில மருத்துவமனைகளில் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில வாரங்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், அந்த பெண் உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை.


இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பெண் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் காய்ச்சல் அறிகுறியுடன் பெண் இருப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் மருத்துவ அலுவலர்கள் ஆம்புலன்சுடன் வந்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என சளி, ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர்.

எனினும் கொரோனா தொற்றின் காரணமாக அப்பெண் இறந்திருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய மறுத்ததுடன் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் சுகாதார மற்றும் வருவாய்த்துறையினர் கொரோனா பீதியால் அந்த உடலை அடக்கம் செய்ய தயக்கத்துடன் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் காலையிலிருந்து மாலை சடலம் அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுமார் 15 பேர், கவச உடைகளுடன் அப்பெண் அடக்கம் செய்துள்ளனர்.