பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி : வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்!!

379

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ப்ளஸ் டூ வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் . நாள்தோறும் பேருந்துகளில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அவரின் தங்கையை அழைத்துக் கொண்டு பணிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்து மூலம் வீடு திரும்பினார். அதற்காக ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பயணித்தார்.

பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் தங்கையே பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவர் நின்றபடி பயணித்தார். அப்போது பேருந்து படிக்கட்டின் அருகே அவர் நின்றதாக தெரிகிறது.


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்திர திரையரங்கு வளைவில் பேருந்து திரும்பிய போது, படியின் ஓரம் நின்றிருந்த கௌசல்யா, பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தவறி கீழே விழுந்தார்.

பேருந்து வேகமாக சென்றபோது அவர் கீழே விழுந்ததால் அதே வேகத்தில் சாலையோரம் இருந்த கல்லில் கவுசல்யாவின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தரையில் விழுந்த கவுசல்யாவின் இறுதி நிமிடங்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.