போன் செய்த தந்தை.. பூட்டிக் கிடந்த வீடு.. மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

425

நீலகிரியில்..

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ராம்சந்த் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, மல்லிகா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சந்தியா கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில், 2வது மகள் ஸ்ரீநிதி (21) கோவையில் உள்ள யுனைடெட் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்வி பயின்று வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால், ஸ்ரீநிதி சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்தார். இன்று காலை பெற்றோர் இருவரும் வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். மதியம் ஸ்ரீநிதியின் தந்தை கணேசமூர்த்தி அவருக்கு போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாக போன் எடுக்காததால் அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்ததோடு, நீண்ட நேரம் கதவைத் தட்டியும் ஸ்ரீநிதி கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், ஜன்னலை உடைத்து பார்த்த போது, வீட்டிற்குள் ஸ்ரீநிதி தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஸ்ரீநிதி பெற்றோருக்கும், கோத்தகிரி காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், ஸ்ரீநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்கு வந்தது முதலே ஸ்ரீநிதி கலகலப்பின்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, அவருக்கு கல்லூரியில் ஏதேனும் பிரச்சினையா அல்லது காதல் பிரச்சினையில் இவ்வாறு செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்று வந்த மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.