மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி.. சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்!!

227

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) முன்னாள் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், தனது திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரியாசுல் ஹக்கியின் மனைவி சபீனா யாஸ்மின் இந்த துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் விமர்சனம் காரணமாக இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து ரியாசுல் நீக்கியுள்ளார். இந்த வீடியோ மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சிபிஎம் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் அமைதியும், பாதுகாப்பும் மோசமாகிவிட்டதாக மம்தா அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளனர். ராணுவம் மற்றும் துணை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட AK 47 துப்பாக்கி,


முன்னாள் TMC தலைவரின் கைகளுக்கு எப்படி வந்தது என்பதை அறிய பாஜக மற்றும் CPM தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் ரியாசுல் என்ன மாதிரியான சமிக்ஞையை தெரிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் ரியாசுல், திருமண பரிசாக மனைவிக்கு ‘பொம்மை துப்பாக்கி’ மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது உண்மையான துப்பாக்கி இல்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வீடியோவில் வெறும் பொம்மை துப்பாக்கியுடன் காணப்பட்டதால், இந்த விஷயத்தில் தனது மனைவி மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி ரியாசுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.