முழு உடல் சோதனை… பெண்ணிடம் டம்போனை அகற்றச் சொன்ன பொலிசார்: கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம்!!

920

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் காவல்துறையினர் இளம் பெண் ஒருவரிடம் சோதனையின் போது தனது டம்போனை அகற்றச் சொன்னதாக சட்ட அமலாக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு சிட்னி முழுவதும் ஐந்து சர்ச்சைக்குரிய முழு உடல் சோதனைகள் தொடர்பான விசாரணையில் பொலிஸ் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

பெரும்பாலானவை இசை விழாக்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன, மேலும் சோதனைக்கு உட்பட்டவர்கள் இதை அவமானமாகவும் இழிவுபடுத்தியதாகவும் உணர்ந்ததாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட இளம் பெண்களில் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சட்ட அமலாக்க நடத்தை ஆணைய அறிக்கை பொலிஸ் படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது,

மற்றொரு வழக்கில் ஒரு அதிகாரி கடமையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த அறிக்கை தொடர்பான விடயங்களை பரிசீலிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.


குறித்த சட்ட அமலாக்க ஆய்வுக்கு இலக்கான சம்பவம் கடந்த 2019 ஜனவரி மாதம் அரங்கேறியுள்ளது. சிட்னி கேசினோவிற்கு வெளியே இரண்டு இளம் பெண்களை பொலிசார் முழு உடல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதில் ஒருவரிடம் தனது டம்போனை அகற்றுமாறு ஒரு அதிகாரி கூறியதாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி சோதனை என்ற பெயரில் இளம் பெண்களிடம் பொலிசார் அருவருப்பாக நடந்து கொண்டுள்ளதும், குறித்த ஆய்வறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

அவுஸ்திரேலிய சட்ட விதிகளின்படி, சூழ்நிலைகளின் தீவிரமும் அவசரமும் கருதி அது நியாயமானதும் அவசியமானதும் ஆகும் என்றால் மட்டுமே காவல்துறையினர் முழு உடல் சோதனைகளை முன்னெடுக்க முடியும்.

மேலும், பிறப்புறுப்பு பகுதிகள் அல்லது அந்தரங்க பகுதிகளை சோதனை என்ற பெயரில் தொடுவது சட்டவிரோதமாகும். இவ்வாறாக முழு உடல் சோதனைக்கு சிறார்களை உட்படுத்தும்போது ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலர் கண்டிப்பாக உடனிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.