ரத்தம் சொட்ட உயிருக்குப் போராடிய இளைஞர்.. உதவாமல் பொருள்களைத் திருடிச் சென்ற மக்கள்!!

101

டெல்லியில்..

டெல்லி குருகிராமில் புகைப்படக் கலைஞராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயங்கிவந்தவர் பியூஷ் பால். இவர் தனது வேலையை முடித்துக்கொண்டு, இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

ஹௌஸ் காஸ் என்ற இடத்தில் சென்றபோது, இவரின் வாகனம் எதிர்பாராதவிதமாக மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பியூஷ் பால், சாலையோரம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

ஆனால், அந்த வழியாகச் சென்ற யாரும் பியூஷ் பாலுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக, அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் பிஸியாக இருந்தனர்.

சிலர் பியூஷ் பாலுக்கு உதவி செய்வதுபோல் அவர் அருகில் சென்று, பியூஷிடமிருந்த பொருள்களைத் திருடிச்சென்றனர். பியூஷிடமிருந்த மொபைல், பர்ஸ், லேப்டாப் உள்ளிட்டவை திருட்டுப்போய்விட்டன.


சிலர் காயமடைந்து கிடந்த பியூஷ் அருகில் நின்று செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். விபத்து குறித்து யாரோ போலீஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.

அரை மணி நேரமாக உதவியின்றி சாலையோரம் கிடந்த பியூஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே, சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து சேர்ந்தனர். ஆனால், சிகிச்சை பலனலிக்காமல் பியூஷ் இறந்துபோனார்.

மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி காயமடைந்தவரிடம், போலீஸார் வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். விபத்து நடந்தவுடன் உதவி செய்திருந்தால், பியூஷ் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், யாரும் உதவி செய்ய முன்வராத காரணத்தால் பரிதாபமாக இறந்துபோனார். பியூஷ் காயமடைந்து கிடந்தபோது அவரிடம் திருடியது யார் என்பது குறித்து, அருகில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.