வெறும் 10 மாதத்தில் மட்டும் 150கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள தங்கக் கடத்தில் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் எடுத்துள்ள என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் விசாரணையில், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த கும்பல் தங்கக்கடத்தலில் ஈடுபட்டு வருவதும், 10 மாதங்களாக இதுவரை 150 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது, ஐக்கிய அரபு தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா மற்றும் சரித், தூதரகம் வழியாக ராஜாங்க ரீதியிலான பார்சல்களை அனுப்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் காரணம் தெரிவிக்காமல் அங்கிருந்து பணியில் இருந்து ஸ்வப்னா மற்றும் சரித் ஆகியோர் விலகியுள்ளனர். தொடர்ந்து சந்தீப் உள்ளிட்டோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தங்கக்கடத்தலை தொடங்கியுள்ளனர்.
இதற்காக ஐக்கிய அரபு எமீரகத்தின் போலி முத்திரையை பயன்படுத்தி வந்ததும், இந்த தங்கத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க என்ஐஏ முடிவு செய்துள்ளது.
மேலும் துபாயைச் சேர்ந்த ஃபைசல் ஃபரீத் என்பவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.