4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு.. உறவினர்கள் கதறல்!!

549

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி எனும் கூலி தொழிலாளி. இவரது இரண்டு வயது ஆண் குழந்தை திருமூர்த்தி கடந்த 17ம் தேதி தமது வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் காணாமல் போன இரண்டு வயது சிறுவன் திருமூர்த்தி சடலமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் உறவினர்கள் உடனடியாக திருப்பாலப்பந்தல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் வீட்டின் ஸ்பீக்கர் பாக்ஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.