தமிழகத்தில் 8 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு பாலத்தின் அடியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த வடலிவிளை இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் தண்ணீர் பிடிக்கும் வெற்று டிரம்மில் 8 வயது சிறுமி உடலில் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்த சிறுமி, கல்விளை இந்திராநகரைச் சேர்ந்த சேகர் – உச்சிமாகாளி தம்பதியின் மகள் என்றும், அவர் 3-ஆம் வகுப்ப் படித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக உச்சிமாகாளி, கணவரை பிரிந்து கூலி வேலை செய்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
நேற்று காலை வழக்கம் போல் உச்சிமாகாளி கூலி வேலைக்குச் சென்று விட்டார். காலை 10.30 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற சிறுமியை அதன் பின்பு காணவில்லை.
அதன் பின்பு தான் அவர் பாலத்தின் அடியில் சடலமாக கிடந்துள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து டிரம்மில் வைத்து வீசி சென்றிருக்கலாம் என்று பொலிசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
இதனால் மேற்கொண்ட கிடுக்குப் பிடி விசாரணையில், கல்விளை இந்திராநகரைச் சேர்ந்த இருவர் ஒரு டிரம்மில் சிறுமியின் உடலை வைத்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துவந்து பாலத்தின் அடியில் வீசிச் சென்றது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் இந்திராநகரைச் சேர்ந்த முத்து ஈஸ்வரன் (20), நந்தீஸ்வரன் (20) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? எப்படி உயிர் இழந்தார் என்பது தெரியவரும்.