`L01 – 501’ மும்பை மாணவி கொலை வழக்கு… மரங்களைக் கணக்கெடுக்கும் இந்த எண் போலீஸாருக்கு உதவியது எப்படி?

283

மும்பையில்..

மும்பையிலுள்ள எஸ்.ஐ.இ.எஸ் கல்லூரில் படித்துவந்த வைஷ்ணவி (19) என்ற மாணவி கடந்த மாதம் 12-ம் தேதி கல்லூரிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரின் தாயார் அருணா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். தொடக்கத்தில் போலீஸார் விசாரித்ததில் எந்தத் துப்பும் துலங்கவில்லை. வைஷ்ணவி நவிமும்பை கலம்பொலி எனும் பகுதியில் வசித்துவந்தார்.

பின்னர் இது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவின் ஆள் கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் வைஷ்ணவியின் மொபைல் சிக்னல் மற்றும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அவர் கார்கர் மலைப்பகுதியில் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரோடு வைபவ் புரன்கலே (24) என்பவரும் இருந்திருக்கிறார்.

இது தொடர்பாக மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் வைஷ்ணவியும் வைபவும் ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவந்தது தெரியவந்தது. மேலும் வைஷ்ணவியின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் வைஷ்ணவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்ட தினத்தில், வைபவ் புறநகர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


உடனே வைபவ் பயன்படுத்திய மொபைல் போனை சோதனை செய்தனர் போலீஸார். இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் அதுல் கூறுகையில், ”வைபவின் மொபைல் போனைச் சோதித்துப் பார்த்தபோது அதில் சில குறிப்புகள் இருந்தன. அதில் வைஷ்ணவியைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து உடலை புதரில் போட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதில் L01 – 501 எனும் எண் இருந்தது.

வேறு ஒருவருடன் வைஷ்ணவிக்குத் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் இந்தக் கொலையைச் செய்திருந்தார் வைபவ். எனினும், வன அலுவலகர்கள் உதவியுடன் அங்கு தேடியும் வைஷ்ணவியின் உடல் கிடைக்கவில்லை. அதன் பின்னர், L01 – 501 எனும் எண் குறித்துத் தேடினோம். அப்போதுதான் அது மரங்கள் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்படும் எண் எனத் தெரியவந்தது. உடனே கார்கர் மலைப்பகுதியில் வைபவ் குறிப்பிட்ட மரம் எங்கிருக்கிறது என்பதை,

கடந்த 6-ம் தேதியிலிருந்து தேட ஆரம்பித்தோம். தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை தேடினோம். டிரோன்களையும் இதற்காகப் பயன்படுத்தினோம். இறுதியாக வைபவ் மொபைலில் குறிப்பிட்டிருந்த மரத்தைக் கண்டுபிடித்து, அதனருகில் தேடிப் பார்த்தபோது அங்கு வைஷ்ணவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடையை வைத்து வைஷ்ணவியை அவரின் தாயார் அடையாளம் காட்டினார்” என்றார்.