எகிப்தில் 4 மாதங்களுக்கு முன்னர் குடும்ப தலைவர் ஒருவர் இறந்ததாக அவர் சடலத்தை உறவினர்கள் புதைத்த நிலையில் அவர் உயிருடன் திரும்பியதை கண்டு திகைத்து போனார்கள். முகமது எல் கம்மல் என்பவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.
ஆசிரியராக பணியாற்றிய கம்மல் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் சென்றுவிடுவார். இதன்பின்னர் குடும்பத்தார் அவரை தேடி அழைத்து வருவார்கள். அதே போல கடந்த ஜனவரி மாதம் வீட்டிலிருந்து மாயமான கம்மலை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கம்மல் குடுத்தாருக்கு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியரான அவர்களின் உறவினர் போன் செய்தார்.
அதில் பேசிய உறவினர், மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அது கம்மலின் சடலமாக இருக்குமோ என நினைக்கிறேன் என கூறினார்.
இதையடுத்து குடும்பத்தார் அனைவரும் சென்று பார்த்த போது அது கம்மல் சடலம் தான் என முடிவுக்கு வந்தனர்,ஆனால் 2 சகோதரிகள் மட்டும் அதை உறுதியாக நம்பவில்லை. பின்னர் அந்த சடலத்தை கொண்டு போய் கடந்த மார்ச் 21ஆம் திகதி அடக்கம் செய்தார்கள்.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு கம்மல் அங்குள்ள காஃப்ர் அல்-ஹோசர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டில் சுற்றி கொண்டிருப்பதை பார்த்த இளைஞர்கள் அவர் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை பார்த்த குடும்பத்தார் திகைத்து போனார்கள், தற்போது கம்மல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு அவரை முறைபடி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.