அடக்கம் செய்யப்பட்ட தாய் திடீரென உயிருடன் வந்ததால் அதிர்ச்சியான மகன்கள்!!

955

திருவள்ளூர்…

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட உடலை தனது தாயின் உடல் என நினைத்து மகன் அடக்கம் செய்த நிலையில், அவரது தாய் உயிருடன் திரும்பி வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கம்மாள். இவருக்கும் எதிர் வீட்டுக்காரர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள தனது மகன் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றுள்ளார் சொக்கம்மாள். பின்னர் அவர் திடீரென அங்கிருந்து மாயமானார். இதையடுத்து மகன்கள் இருவரும் சொக்கம்மாளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனிடையே கடந்த 24 ஆம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் மற்றொரு மகன் சரவணனை அழைத்து சடலத்தை அடையாளம் காட்டச் செய்துள்ளனர். அப்போது, அங்கு வந்த சரவணன் இது தனது தாயின் சடலம் என அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து, சொக்கம்மாளின் உடலை பெற்றுக்கொண்ட இளைய மகன் சரவணன் அடக்கம் செய்துள்ளார்.


இதனிடையே, உயிரிழந்ததாக கருதப்பட்ட தாயார் சொக்கம்மாள் கடந்த 29ஆம் தேதி மகன் சரவணன் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன், பின்னர் தாய் உயிருடன் வந்ததை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு சரவணன் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அடக்கம் செய்யப்பட்டது செங்குன்றத்தை சேர்ந்த சகுந்தலா தேவி என தெரியவந்தது. உடனே, அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், செங்குன்றம் அடுத்த புதுநகரை சேர்ந்த சகுந்தலா என்பவர் ரயில் நிலையம் அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது மாயமானது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சகுந்தலாவின் உறவினர்களை அழைத்து, வட்டாட்சியர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை அதிகாரிகள் தோண்டி எடுத்தனர். அப்போது, உடலில் இருந்த மச்சம் மற்றும் பச்சை குத்து முதலிய அடையாளங்களை வைத்து சகுந்தலா தான் என உறவினர்கள் உறுதி செய்தனர்.

தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சகுந்தலா உயிரிழந்த மர்மம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்பட்ட தாயார் உயிரோடு வந்த சம்பவம் அந்த பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.