இந்திய தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
டெல்லி ஐடிஓ அருகே அண்ணா நகர் பகுதியில் பெருவெள்ளத்தில் சிக்கி பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குடிசைப்பகுதியில் உள்ள பல குடியிருப்புகள் பெருவெள்ளத்தில் சிக்கி இடிந்து விழும் நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் அலறும் சத்தமும் அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ஆனால் சம்பவத்தின் போது பொதுமக்கள் எவரும் தங்கள் குடியிருப்புகளில் இல்லை எனவும், பாதுகாப்பு கருதி அவர்களை ஏற்கனவே அப்புறப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மீட்பு குழுவினர் மற்றும் பேரிடர் சிறப்பு படையினர் ஒன்றிணைந்து தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஞாயிறு பகல் டெல்லியின் மின்றோ பாலம் அருகே அமைந்துள்ள சாலையில் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அதிகாரிகள் முன்னிலையில் மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஞாயிறு பகல் வரையான தகவலின்படி டெல்லியில் 4.9 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.