இன்ஸ்டா குயின் பிரதிக்‌ஷா தற்கொலை.. உடனே அது நடந்திருந்தா காப்பாற்றியிருக்கலாம்?

1832

பிரதிக்‌ஷா..

திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், 4வது வகுப்பு தாங்க படிச்சுக்கிட்டு இருந்தா… அதுக்குள்ள விதி வேற மாதிரி விளையாடிடுச்சு என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு விசும்புகிறார்கள்.

அவளுடைய வீடியோவை எல்லாம் பார்த்துட்டு, சின்ன பொண்ணு எத்தனை பிரமாதமா செய்யுது பாருன்னு ரசிச்சிருக்கோம்.. இத்தனை சின்ன வயசுல பேர், புகழ்ன்னு எல்லாமே வேக வேகமா அவளுக்கு கிடைச்சுது.. அதுல போல சாவும் இத்தனை சீக்கிரத்துல வரணுமா என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

9 வயசே ஆன பிரதிக்‌ஷா, மழலை மாறாம தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொள்ள முயன்றதில், நீண்ட நேரம் உயிருக்குப் போராடிய படியே தான் இறந்திருப்பதாக சொல்கிறார்கள். வெளியே சென்றிருந்த யாரேனும் ஒருவராவது கொஞ்சம் முன்பே வீடு திரும்பியிருந்தால் அவளைக் காப்பாற்றி இருக்கலாம்.


திருவள்ளூர் பெரியகுப்பத்தில் கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், பிரதிக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் பிரதிக்‌ஷா, சினிமா பாடல்களுக்கு வாயசைத்து நடனமாடி இன்ஸ்டாகிராமில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்தி வந்துள்ளார். மகளின் செயலை முதலில் ரசித்த பெற்றோர், ஒரு கட்டத்தில் அவர் செல்போனில் மூழ்கி அடிமையாவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரதிக்‌ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர், இரவு நேரமாகி விட்டதால் வீட்டுக்கு சென்று படிக்குமாறு கூறி விட்டு, வீட்டின் சாவியை சிறுமி பிரதிக்‌ஷாவிடம் கொடுத்து விட்டு பைக்கில் வெளியே சென்றனர்.

சிறிது நேரத்துக்கு பின் கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்தது. இதனால் அவர்கள் பலமுறை பிரதிக்‌ஷாவின் பெயரை அழைத்தும், கதவை தட்டியும் திறக்கவில்லை.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது, சிறுமி ஜன்னல் கம்பியில் கட்டி தூக்கிட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் கொஞ்சம் நேரம் முன்பாகவே வீடு திரும்பியிருந்தால் பிரதீக்‌ஷாவைக் காப்பாற்றி இருக்கலாம்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமி உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.