கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்ட படம் மலையாளத்தில் வெளியான பிரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும்.. இதன் ரீமேக் உரிமை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உடனடியாக விற்பனை ஆனதும், இதில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பதுமாக தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வந்த இந்தப்படத்தை இயக்கியவர் பிரபல கதாசிரியர் சாச்சி. இவர் நேற்றைய முன்தினம் (ஜுன் 18) இரவு காலமானார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. உடனடியாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாச்சிக்கு அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. ஆனால் இரண்டாவது அறுவை சிகிச்சை பெயிலியர் ஆனதால் சாச்சியின் நிலை கவலைக்கிடமாக ஆனது. கிட்டத்தட்ட மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று கூட தகவல் வெளியானது. இந்தநிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்துள்ளது. இவரது மறைவு மலையாள திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 2007ஆம் வருடம் வெளியான சாக்லேட் என்கிற படம் மூலம் மலையாள திரையுலகில் கதாசிரியராக அறிமுகமானார் சாச்சி.. தான் மட்டுமல்லாமல் தனது நண்பன் சேதுவையும் இணைத்துக்கொண்டு வெற்றிகரமான இரட்டை கதாசிரியர்களாக இருவரும் வலம் வந்தனர். கதாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள திரையுலகில் இரட்டை காதசிரியர்கள் கோலோச்சுவதும், பின் தங்களது தனித்திறமையை பரிசோதிக்க கூட்டணியில் இருந்து பிரிவதும் வாடிக்கையான ஒன்று தான்.
அந்தவகையில் அப்படி ஒரு ஹிட் காம்பினேஷன் கதாசிரியர்களாக வலம் வந்த சாச்சி-சேது இருவரும் ஒருகட்டத்தில் தனியாக பிரிந்தார்கள். சொல்லப்போனால். இயக்குனராகும் ஆசை சாச்சிக்கு எழவே, கூட்டணியில் இருந்து பிரிந்தார்.. தானே தனியாக கதை எழுதி, பிரித்விராஜை வைத்து ‘அனார்கலி’ என்கிற படத்தை இயக்கி நூறு நாட்கள் ஓடும் வெற்றிப்படமாக்கினார். அதேசமயம் மற்றவர்களின் படங்களுக்கும் கதை எழுதுவதை அவர் நிறுத்தவில்லை.
நடிகை விவகாரத்தில் சிக்கி, நடிகர் திலீப் சிறையில் இருந்த சமயத்தில் மக்கள் செல்வாக்கு அவருக்கு அவ்வளவுதான் என சொல்லப்பட்ட நிலையில் வெளியாகி நூறு கோடி வசூலித்து மாஸ் காட்டிய அவரது ராம்லீலா படத்தின் கதாசிரியர் இந்த சாச்சி தான்.
பிரித்விராஜ் படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ, இப்போது வரை, அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த சாச்சி, ஐம்பது நாட்கள் இடைவெளியில் பிரித்விராஜுக்கு ட்ரைவிங் லைசென்ஸ்(டிச-2௦) மற்றும் அய்யப்பனும் கோஷியும்(பிப்-7) என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் கொடுத்தார். அடுத்ததாக பிரித்விராஜ நடிக்கும் புதிய படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
இந்தநிலையில் தான் சாச்சி, எதிர்பாரத விதமாக மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு சென்றுள்ளார்.. இவரது மரணம் மலையாள திரையுலகிற்கு, குறிப்பாக பிரித்விராஜுக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்றே சொல்லலாம்..