
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற கும்பலை பொலிசார் கைது செய்தள்ளனர். கொரோனாவால் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள், மிளகு உள்ளிட்டவைகள் கடத்தப்பட உள்ளதாக காவல்கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக செல்போன் எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனவே வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை செய்த பிறகே பொலிசார் அனுமதித்தனர்.
அப்போது அங்கே வந்த ஆம்னி வான் ஒன்றில் இருந்தவர்கள் பொலிசை கண்டதும் தப்பியோடிவிட்டனர்.

உள்ளே பொலிசார் சோதனை செய்ததில், 15 மூட்டைகளில் 600 கிலோ மஞ்சள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் பாம்பன், குத்துக்கல் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் என்பவரின் படகு மூலம் இந்த மஞ்சளை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங், பாபு உசேன், அப்துல் முபாரக் ஆகிய 3 பேரை கைது செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஆம்னி வேன் ஓட்டுனர் ரியாஸ்கானை தேடி வருகின்றனர்.

இங்கிருந்து மஞ்சளை கடத்திக்கொன்று சென்று அங்கிருந்த தங்கத்தை கடத்திவரவும் திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.















