சென்னை..

சென்னை பெரம்பூர், பாக்சன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர். திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன். ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்துவருகிறேன்.

என்னுடைய அப்பா குப்பன், கோயம்பேட்டிலுள்ள வாழை இலைக் கடையில் கூலி வேலை பார்த்துவருகிறார். என்னுடைய அம்மா லதா. எனக்கு தினேஷ்குமார் (26) என்ற தம்பி இருக்கிறான். ப்ளஸ் டூ வரை படித்த அவன், கூலி வேலைக்குச் சென்று வருவான்.

கடந்த 5.9.2022-ம் தேதி என்னுடைய தம்பி தினேஷ்குமார், கௌசல்யா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். என் தம்பி மீதான குற்ற வழக்குகள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருக்கின்றன.

என்னுடைய தம்பி தினேஷ்குமார், தன்னுடைய மனைவி கௌசல்யா, அவரின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையுடன் திரு.வி.க.நகர், நீலம் தோட்டம், 3-வது தெருவில் வசித்துவந்தான்.

என்னுடைய தம்பி தினேஷ்குமார், தினமும் காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, கூலி வேலைக்குச் சென்று மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வருவான். அதேபோல 20.12.2022-ம் தேதி காலை 6 மணிக்கு மனைவியிடம் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறான்.

அதன் பிறகு காலை 10:30 மணியளவில் கண்ணகி நகர் போலீஸார் என கௌசல்யாவிடம் பேசிய ஒருவர், தினேஷ்னுகுமாரைப் பிடித்து வைத்திருக்கிறோம். அவனுடன் இருந்தவன் செல்போனை எடுத்துச் சென்றுவிட்டான். போனைக் கொடுத்துவிட்டு தினேஷ்குமாரை அழைத்துச் செல் என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் கௌசல்யாவும், என்னுடைய அம்மா லதாவும் ஆட்டோவில் சென்று தினேஷ்குமாரின் நண்பர் கொடுத்த விலையுயர்ந்த செல்போன் ஒன்றை பெருங்குடி டோல்கேட் அருகிலிருந்த போலீஸ் பூத்துக்குச் சென்று அங்கிருந்த பெண் எஸ்.ஐ மற்றும் மஃப்டியிலிருந்த போலீஸாரிடம் கொடுத்துவிட்டு என் தம்பி தினேஷ்குமாரை அழைத்துவந்தனர்.

வரும் வழியிலேயே தினேஷ்குமார், கௌசல்யாவிடம் தன்னை போலீஸார் அடித்ததாகச் சொல்லியிருக்கிறான். பின்னர் என் தம்பியை வீட்டுக்கு அவரின் மனைவி கௌசல்யா அழைத்து வந்திருக்கிறார். அப்போது தினேஷ்குமார், கை கால்களில் வலி அதிகமாக இருக்கிறது என்று சொன்னதால் சுடுதண்ணீரில் கௌசல்யா ஒத்தடம் கொடுத்திருக்கிறார்.

பின்னர் தினேஷ்குமாரை பெரம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கௌசல்யா அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இரவில் தினேஷ்குமார் கழிவறைக்குச் சென்றிருக்கிறான். அப்போது அங்கிருந்து வந்த சத்தம் கேட்டு கௌசல்யா சென்றிருக்கிறார்.

அப்போது மயக்கநிலையில் தினேஷ்குமார் கீழே கிடந்திருக்கிறான். உடனே கௌசல்யா எனக்கு போன் செய்ததால் நானும், என் அம்மா லதாவும் அங்கு சென்று தினேஷ்குமாரை ஆட்டோவில் வைத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு தினேஷ்குமாரைப் பரிசோதித்துவிட்டு அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

எனவே, என்னுடைய தம்பி தினேஷ்குமாரின் இறப்பை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன், சிஆர்பிசி 176 (1A)(1) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறார்.

இந்த நிலையில் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் மாஜிஸ்ட்ரேட் ஜெகதீசன், உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட போலீஸாரிடமும் விசாரணை நடத்தி, அதன் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

இதற்கிடையில் தினேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தினேஷ்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தினேஷ்குமாரின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். அதனால் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.















