
தமிழகத்தின் மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அல்வா என்ற முத்துச்செல்வம் (22). அப்பகுதி பாமக பிரமுகர் இளஞ்செழியன், அவரது தம்பி மாரி கொலை வழக்கில் முத்துச்செல்வத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளஞ்செழியன் கொலைக்கு முன்பு இருந்தே இரு தரப்பும் மாறி மாறி கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இளஞ்செழியன் கொலைக்கு பிறகு இருதரப்புக்கும் பகை முற்றியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியார் நகர் பகுதியில் முத்துச்செல்வம் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து விரட்டியுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பத்ர காளியம்மன் கோயில் வாசல் முன்பு முத்துச்செல்வத்தை சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த முத்துச்செல்வத்தின் தலையை துண்டித்து, காளிக்கு படைப்பது போல கோயில் வாசலில் வைத்துவிட்டு அங்கிருந்து ஆக்ரோஷமாக கூச்சலிட்டபடி தப்பியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் முத்துச்செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இளைஞரை கொலை செய்து தலையை கோயில் வாசலில் போட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















