உயிரிழந்த தந்தை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி : கல்விக் கனவுக்காக நெகிழ வைத்த மாணவி!!

10576

ராமநாதபுரம்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இரவிச்சந்திரன் (வயது 48).

இவரது மகள் சுரேகா. பரமக்குடி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறாரா சுரேகா.

இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இரவிச்சந்திரன், திடீரென உயிரிழந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பக்கம், அதே நாளில் சுரேகாவுக்கு வணிகவியல் பாடத்திற்கான பொதுத் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், தந்தைக்கு நேர்ந்த நிலையைக் கண்டு, மகள் சுரேகா கடும் வேதனை அடைந்தார்.


இருந்த போதும், நன்றாக படித்து, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி, அதனை நிறைவேற்றும் பொருட்டு, கலங்கிய மனதுடன் உறவினர் ஒருவருடன், தேர்வு எழுத பள்ளிக்கு வந்துள்ளார் சுரேகா.

பள்ளி வளாகம் வந்த சுரேகா, மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். அவரை சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆறுதல் கூறி தேற்றினார். தேர்வை முடித்து விட்டு, தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்றார் சுரேகா.

இது தொடர்பான செய்தி தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், சுரேகாவின் நிலையை எண்ணி, பலரது மனமும் கலங்கிப் போயுள்ளது. மாணவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தும், அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.