
“நான் யார் தெரியுமா? போலீசு.. எங்கிட்டேயேவா?” என்று ஆவேசமாக பெண் வியாபாரி ஒருவரின் தலைமுடியைப் பிடித்து மல்லுக்கட்டிய பெண் காவலரை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தப்படி கலைந்து சென்றனர் கடைத்தெருவுக்கு வந்திருந்த மக்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி(59). இவர் புவனகிரியில் பால்பூத் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் கடைக்கு புவனகிரி மகா நகரில் வசித்து வரும் ராஜலட்சுமியும், அவரது தங்கை ரபேந்திரா சென்றுள்ளனர்.
ராஜலட்சுமி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். சரஸ்வதியின் கடைக்கு சென்ற ராஜலட்சுமியும், அவரது தங்கை ரபேந்திராவும் ஐஸ்கிரீம் கேட்டதாக தெரிகிறது.
அதே நேரத்தில் இருவருமே கடையில் இருந்த ஃப்ரீசர் பாக்ஸைத் திறந்து ஐஸ்கிரீமை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.
இவர்கள் அப்போது ஃப்ரீசர் பாக்ஸை திறப்பதும் மூடுவதுமாக இருந்ததை பார்த்த சரஸ்வதி, இதுபோல் ஐஸ் பெட்டியை திறந்து மூடினால் கூலிங் இல்லாமல் போய்விடும், எனவே அப்படி செய்யாதீர்கள் எனக் கூறினார்.
இதனால் கோபமடைந்த ராஜலட்சுமி, நான் யார் தெரியுமா ? நான் ஒரு போலீஸ் எனக் கூறி கடைக்காரரான சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கைகலப்பாக மாறியது.
ராஜலட்சுமியும், சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கி குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டனர். அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்கள், இருவரையும் சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட முயற்சித்தனர்.
இது குறித்து சரஸ்வதி போலீசாருக்கு தகவல் அளித்தார், அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசி சண்டை போட்டதாக சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் ராஜலட்சுமி, அவரது தங்கை ரபேந்திரா, அவர்களது தந்தை ஜெய்சங்கர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே போல தன்னை சரஸ்வதி தகாத வார்த்தைகளால் திட்டி தலை முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் சரஸ்வதி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 வயதாகும் பெண் போலீஸ் ஒருவர் கடைக்கார பெண்மணியுடன் குடுமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது..















